search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர் ஆராய்ச்சி நிறுவனம்"

    புவி வெப்பமயமாவதால் கடல்மட்டம் உயர்ந்து சென்னை, நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #GlobalWarming
    சென்னை:

    தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் பேராசிரியர் எஸ்.ஜனகராஜன். இவர் இயற்கை பேரிடர் குறித்து கூறியதாவது:-

    கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட பேரிடர், இடுக்கி அணை நீரால் ஏற்பட்ட சேதம், இயற்கை சீற்றம் என்று பல்வேறு காரணங்கள் கூறுகிறார்கள். உண்மையில் இது மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பேரிடர்.

    மேற்கு தொடர்ச்சி மலை 6 மாநிலங்களில் இயற்கை வரமாக அமைந்துள்ளது. இதன் இயற்கை சூழல் பாதுகாப்பு குறித்து அறிவியலாளர் மாதவ் காட்கில் தலைமையிலான குழு ஒரு அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், மேற்கு தொடர்ச்சி மலையை 4 மண்டலங்களாக பிரித்து 3 மண்டலங்களில் குவாரிகளை அனுமதிக்க கூடாது. குடியேற்றங்களை அனுமதிக்க கூடாது.



    இயற்கைக்கு எதிரான எந்த செயல் திட்டங்களையும் அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் அதை ஏற்க மறுத்தன. அதனால் ஏற்பட்ட விளைவுதான் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு.

    இந்தியாவிலேயே சென்னை நகரில் தான் வெள்ள நீர் விரைவாக வெளியேற வடிகால் வசதி உள்ளது. வடசென்னையில் கொசஸ்தலை ஆறு, தென் சென்னையில் அடையாறு, மத்திய சென்னையில் கூவம் ஆகியவற்றின் மூலம் வெள்ளநீர் கடலில் கலக்கும். இதுதவிர 16 பெரிய நீரோடைகளும் இருக்கின்றன.

    இத்தனை வசதிகள் இருந்தும் அவற்றை முறையாக பராமரிக்காதது தான், 2015-ம் ஆண்டு சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கு காரணம். சென்னையில் வார்தா புயலின்போது வேரோடு சாய்ந்த மரங்கள் அனைத்தும் வெளிநாட்டு வகையை சார்ந்த மரங்கள். ஆனால் நமது நாட்டு மரங்களான வேம்பு, அரசு உள்ளிட்ட மரங்கள் ஒன்றுகூட விழவில்லை.

    குவாரிக்காகவோ அல்லது நியூட்ரினோ போன்ற திட்டங்களுக்காகவோ, பாறைகளை உடைக்கும் போது அல்லது குடையும் போது அந்த பாறையோடு இணைந்த உறுதியானது மண் பிணைப்பு நெகிழ்ந்து விடும். இது மழை காலத்தில் நிலச்சரிவை ஏற்படுத்தும்.

    நிலத்தடியில் இருந்து மீத்தேனை எடுக்கும்போது மீத்தேனுடன் நிலக்கரி, பாறைகள், தண்ணீர் ஆகியவற்றை வெளியேற்ற வேண்டும். அவ்வாறு செய்யும் போது நிலத்தின் உட்பகுதியில் வெற்றிடம் ஏற்படும்.

    புவி வெப்பமயமாவதால் கடல்மட்டம் உயரும். இதனால் சென்னை நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடலில் மூழ்கும் ஆபத்து உள்ளது.

    நாகை மாவட்டத்துக்கு இதனால் பெரும் ஆபத்து உள்ள நிலையில், அங்கு மீத்தேன் எடுத்தால் நிலத்தடியில் வெற்றிடம் ஏற்பட்டு நில மட்டம் தாழ்ந்துவிடும். இதனால் கடல்நீர் எளிதில் உட்புகுந்து விடும். எனவே, இயற்கையின் சமநிலையை நாம் எப்போதும் சீர்குலைத்து விடக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார். #GlobalWarming
    ×